“கொடூரம் வெட்கக்கேடானது., பெண்களுக்கு பாதுகாப்பில்லை” எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி , அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

Annamalai - Edappadi palanisamy

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியை 2 பேர் நேற்று இரவு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றொரு நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண்ணை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டிடிவி.தினகரன் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது.

பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெட்டுப்போயுள்ளதற்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிடுகையில், ” சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் முதன்மை கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மர்ம நபர்களால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க ஆட்சியில் தமிழகம் சட்டத்துக்குப் புறம்பான செயல்களின் விளைநிலமாகவும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் மாறிவிட்டது. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக ஆளும் நிர்வாகத்தால் காவல்துறை மும்முரமாக இருப்பதால், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை. ” என பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் பதிவிடுகையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்