இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!
அம்பேத்கரின் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என விசிக போராட்டம் நடத்தினால் அதில் நானும் கலந்துகொள்ள தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது பேஷனாகிவிட்டது, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதில் கடவுள் பெயரை கூறினால் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். அமித்ஷா கருத்துக்கு பின்னர், ‘தான் கூறியதை தவறாக திரித்து பேசுகின்றனர்’ என விளக்கமும் அளித்தார்.
இருந்தாலும், அமித்ஷா அம்பேத்கர் பற்றி கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. குறிப்பாக தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் அமித்ஷாவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, அண்மையில், விசிக தலைவர் திருமாவளவன், வரும் டிசம்பர் 28ஆம் தேதியன்று தமிழகம் முழுக்க அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ‘1000 முறை அம்பேத்கர் பெயர் உச்சரிக்கும் போராட்டம் ‘ ஒன்றை நடத்த உள்ளோம் என அறிவித்தார்.
இந்த போராட்டம் குறித்து நேற்று செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்கையில், அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரித்து போராட்டம் செய்ய போகிறார்கள் என திருமாவளவன் அறிவித்துள்ளார். நீங்கள் போராட்டம் நடத்துங்கள் தவறில்லை. அதே நேரம், அம்பேத்கரின் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்று 1000 முறை உச்சரித்து போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள தயார்.” என கூறி, அம்பேத்கர் கொள்கைகளை ஆளும் தமிழக அரசு பின்பற்றவில்லை என விமர்சனம் செய்துள்ளார் அண்ணாமலை.