டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!
டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ள இடத்தை மீண்டும் ஆய்வு செய்து, எல்லையை மறு வரையறை செய்ய இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் எழுந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்காக கனிமங்களை ஏலம் விடுவதே சுரங்க அமைச்சகத்தின் பங்கு எனவும், பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ள இடத்தில் சுரங்கம் அமையவுள்ளதாக கருத்துருக்கள் வந்த காரணத்தால் பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அது மட்டுமின்றி, இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பலமுறை கலந்து ஆலோசித்த போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், குறிப்பாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஏலம் தொடங்கிய போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு எடுத்ததாகவும் நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி ஏலம் முடிவு அறிவிக்கப்பட்டது. அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. அது மட்டுமின்றி, டங்ஸ்டன் விருப்ப ஏலதாரருக்கு ஒப்பந்தக் கடிதம் வழங்கும் பணியை நிறுத்த தமிழக அரசுக்கு மத்திய அரசு கோரிக்கையையும் வைத்துள்ளது.