திரையரங்கில் பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் போலீசில் ஆஜர்!
திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.
அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிச,4 அன்று தொடங்கிய இந்த விவகாரம், ஓயாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆம், கூட்ட நெரிசல் சிக்கி பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக கூறி, அல்லு அர்ஜுன் கைதில் தொடங்கி, அல்லு அர்ஜுன் மற்றும்தெலுங்கு திரையுலகம் பற்றி சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு. இதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் வீட்டின் மீதான தாக்குதல் என இப்பொது காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர் வரை ஓயாமல் சென்று கொண்டிருக்கிறது.
தற்பொழுது, திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, இன்று காலை 11 மணிக்கு பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணி அளவில் காவல் நிலையத்தில் ஆஜராவதற்கு, தனது வீட்டில் இருந்து வாடிய முகத்துடன் தனது மனைவியை கட்டியணைத்து, குழந்தையை கொஞ்சியபடி புறப்பட்டு, காரின் மூலம் பிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையிடம் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்ற பின்பு கூடுதல் தகவல் தெரியவரும்.