“அதெல்லாம் முடியாது” மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற மத்திய அரசின் திருத்தத்தை ஏற்க மறுத்தது பள்ளிகல்வித்துறை.
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதாவது கல்வி உரிமை சட்டம் (RTE) 2019 விதியில் மாற்றம் கொண்டு வந்து, 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என கூறப்பட்டது.
5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொது தேர்வு போல தேர்வை நடத்தி அதில் ஒருவேளை சில மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் 2 மாதங்களில் வரும் மறுதேர்வு நடத்தி அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அந்த மாணவர்கள் செல்ல முடியாது என்றும், இதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற விதிமுறையின் கீழ் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. அதனால், மத்திய அரசு கொண்டு வந்த திருத்தம் தமிழகத்தில் அமலாகுமா என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால், அதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது குறித்து விரிவான அறிக்கையே வெளியிட்டுள்ளார்.
அதில் , மத்திய கல்வி அமைச்சகம் கொண்டு வந்த மாணவர்கள் தேர்ச்சி விதிமுறை திருத்தம், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி வரும் மாநிலங்களுக்கும், நவொதயா மற்றும் கேந்திரா வித்யாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகளில் இந்த விதிமுறை பொருந்தும், தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இந்த விதிமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டு தோறும் தர வேண்டிய ரூ.2,251 கோடி ரூபாய் நிதியை இன்னும் தரவில்லை என மத்திய அமைச்சரிடம் கேட்டதாகவும், ஆனால் , நீங்கள் (தமிழக பள்ளிக்கல்வித்துறை) தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என நிபந்தனை விதித்ததாகவும், அதற்கு தமிழக எம்பிக்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.