150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை – மீட்புப் பணிகள் தீவிரம்!
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, இதேபோல் டிசம்பர் 11 ஆம் தேதி ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன், மூன்று நாள் கழித்து நீண்ட நேரம் மீட்பு பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். ஆனால், சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சோகம் மறைவதற்குள், அடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. சேத்னா என்கிற மூன்று வயது பெண் குழந்தை, தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர்கள் உடனே, போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.