இனி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இல்லை? மத்திய அரசு திட்டவட்டம்!
5 மற்றும் 8ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய கல்வி அமைச்சகம் தற்போது ரத்து செய்து திருத்தம் மேற்கொண்டுள்ளது.
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி இருந்தது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் உள்ளது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு போல நடத்தி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ஆம் வகுப்பு இறுதி தேர்வில் தோல்வியுற்றாலும் அடுத்த 2 மாதங்களில் மறுதேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் அடுத்த வகுப்பிற்கு செல்லலாம். ஆனால், இரு தேர்விலும் தோல்வியுற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாமல் , தேர்ச்சிபெறா மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் பயிலும் நிலை ஏற்படும் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது மத்திய கல்வி அமைச்சகம் திருத்தம் செய்துள்ள இச்சட்ட திருத்தமானது, அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு நடத்தும் கேந்திரா வித்யாலயா, நவொதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் நடைமுறைக்கு வரும் என்றும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒப்புதல் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.