2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்
கடந்த தேர்தலில் எங்களுக்கு 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் கொடுக்கப்பட்டது. அடுத்த முறை அதிகரித்து கேட்போம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 25 தொகுதிகளை கேட்போம் என கூறியிருந்தார்.
விசிக துணை பொதுச்செயலாளரின் இந்த கருத்து குறித்து இன்று கடலூரில் சேத்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னி அரசு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் கட்சி குழுவினருடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு செய்வோம். ” என தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கில் நீங்கள் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கேட்க வாய்ப்புள்ளதா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், ” ஏற்கனவே கடந்த முறை திமுக கூட்டணியில் எங்களுக்கு கொடுத்தது 10 தொகுதிகள் இரட்டை இலக்கம் தானே, நாங்கள் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் தான். கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அதனால் நாங்கள் கலந்து ஆலோசித்து தான் முடிவு செய்வோம். ” என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ” மது ஒழிப்பு என்பது தேசிய அளவிலான பிரச்சனை. இதில், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இதனை ஒரு போராட்ட சக்தியாக மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. தென்னிந்திய அளவில் மது ஒழிப்பு செயல்திட்டத்தை நாங்கள் வரையறுத்துள்ளோம். அதனை தொடர்ந்து மேற்கொள்வோம். ” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.