சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வானது ஆகஸ்ட் , செம்படம்பர் மாதங்களில் நடைபெறும்.
இந்த முதற்கட்ட நீட் கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும் காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை குறித்தும், அதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்னிறுத்தியும் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருத்தது.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.காவாய், கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டு, மருத்துவ கல்லூரிகளில் மீதமுள்ள மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் என குறிப்பிட்டனர்.
மேலும், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், இம்மாத (டிசம்பர்) இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.