மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியா? அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி!
மும்மொழி கொளகை ஏற்றுக்கொண்டால் தான் தமிழக பள்ளிகல்வித்துறைக்கு நிதி தருவோம் என மத்திய அரசு கூறி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி அளிப்போம் என மத்திய அமைச்சர் கூறியதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ” தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிலுவை இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய ரூ.2,151 கோடி தொகை நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசு குறிப்பிடும் 20 கொள்கைகளில் 18இல் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. எதிலாவது தமிழக பள்ளிக்கல்வித்துறை குறைவாக செயல்படுகிறதா? மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. ஓர் அறிவுசார்ந்த சமுதாயம் வளருவதை ஊக்குவிக்க ஏன் அவர்கள் (மத்திய அரசு) இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள் என புரியவில்லை.
நல்லது கெட்டது எதுவென்று பகுத்தறிந்து பார்க்கக்கூடிய சமுதாயத்தை நாம் படைத்திருக்கிறோம். அதற்கு உதவுவதற்கு தான் நாங்கள் நிதி கேட்கிறோம். இந்த ரூ.2151 கோடி என்பது நாங்கள் (தமிழக அரசு) முதன்முறையாக கேட்கவில்லை. 2018 முதலே மத்திய அரசு கொடுத்து வந்த நிதிதான். இப்போது கொடுக்க மறுக்கிறார்கள். இப்போது தேசிய கல்வி கொள்கையின் மும்மொழி கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் என கூறுகிறார்கள்.
நாங்கள் எங்கள் கட்சிக்காகவா கேட்கின்றோம்? 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக கேட்கின்றோம். தற்போது வரை ஆசியர்களுக்கு தர வேண்டிய சம்பள பணத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் மாநில அரசு நிதியளித்து வருகிறது.
எங்கள் நாடளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் 10 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படாமல் இருப்பது குறித்து கேட்ட போது, எங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப் தான் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறுகையில், நானே ஹிந்தி இல்லாத மாநிலத்தில் இருந்து வந்தவன். நானே கூறுகிறேன் என அவர் இந்தியை ஏற்றுக்கொள்ள அவர் கூறுகிறார்.
இரு மொழி கொள்கை என்பது பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் நிலைப்பாடு. நாங்கள் பள்ளி கல்வியில் குறைவாக செயல்பட்டு இருந்தால் கூட பரவாயில்லை. உலக முழுக்க, இந்தியா முழுக்க தமிழக மாணவர்கள் முன்னேறி செல்கின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பணத்தை அவர்கள் தர மறுத்தால் பல்வேறு செயல்திட்டங்கள் செய்ய முடியாமல் உள்ளன. கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வரச்சொல்லி இதனால்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ” என அன்பில் மகேஷ் கூறினார்.