பிரதமர் மோடிக்கு குவைத்தில் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரம்!
பிரதமர் மோடிக்கு குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆர்டர் எனும் அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை சந்தித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு நேற்று குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா – குவைத் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இருநாட்டு பாதுகாப்பு, கூட்டுறவு துறை, கலாச்சாரம், இந்தியாவின் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணைவது தொடர்பான ஒப்பந்தஙகை கையெழுத்தாகின.
இதனை அடுத்து, குவைத் நாட்டில் அயல்நாட்டு உயர் தலைவர்களுக்கு வழங்கப்படும் அந்நாட்டின் உயர் விருதான, ‘முபாரக் அல்-கபீர்’ எனும் உயர் விருது வழங்கப்பட்டது. குவைத் நாட்டின் மன்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதனை வழங்கினார். இந்த விருதை இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குவைத் மன்னர் கூறுகையில், “இது குவைத் நாட்டின் மிக உயரிய விருதாகும். இந்த விருதை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறது. இந்தியா, குவைத் நாடுகளுக்கு இடையிலான உறவு இதனால் மேலும் வலுவடையும்.” எனக் குறிப்பிட்டார்.
இந்த விருது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ” குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா அவர்களால் முபாரக் அல்-கபீர் ஆணை வழங்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையே உள்ள வலுவான நட்புறவுக்கும் அர்ப்பணிக்கிறேன்.” என கூறியுள்ளர்.