அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!
"இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான மனிதர்கள்?" எனக் குறிப்பிட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலங்கானா முதல்வர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவரிக்குமாறு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அக்பருதின் ஒவைஸி எழுப்பியக் கேள்விக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதிலளித்துப் பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இத்தனை வருடங்களில் சினிமா துறைக்கு டிக்கெட், விலை மற்றும் சிறப்பு காட்சிகள் என சலுகைகள் வழங்கப்பட்டு நன்றாக இருந்தது. ஆனால் இப்போது திரையுலகம் சாமானியர்களைக் கொல்லத் தொடங்கிவிட்டது.
இனிமேல், நான் மாநில முதல்வராக இருக்கும் வரை திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது என்று இன்று சொல்கிறேன். தான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது” என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடியாக கூறினார்.
மேலும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் தெலுங்கு திரையுலகம் மீதும் கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி,”உங்கள் தொழிலை நடத்தவும், உங்கள் திரைப்படங்களை எடுக்கவும், பணம் சம்பாதிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு ஊக்கத்தொகை, மானியங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். ஆனால், ஒருவரின் கொலைக்கு காரணமான பிறகு, இனிமேல் உங்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்காது” என்றார்.
மேலும் பேசிய ரேவந்த் ரெட்டி, திரையரங்கில் கூட்டத்தை சமாளிக்க முடியாததால், உடனடியாக வெளியேறுமாறு போலீசார் கூறியும், அல்லு அர்ஜுன் வெளியேறவில்லை. இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான மனிதர்கள்? அப்போது சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து, பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றுகொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தார். பின்னர், போலீசார் கைது செய்வோம் என மிரட்டிய பிறகே அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இரவு மட்டும் சிறையில் இருந்து மறுநாள் ஜமீனில் விடுதலையாகி வீட்டிற்கு சென்றார். அல்லு அர்ஜுன் என்ன கை, கால்களை இழந்துவிட்டாரா? அவர் வீட்டிற்கு சென்றபோதும் அவரை பார்க்க வரிசையில் பலர் நிற்கின்றனர். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை யாரும் சென்று பார்க்காதது துரதிர்ஷ்டவசமானது.