பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…
பழைய EV கார்கள் விற்பனையின் போது விதிக்கப்படும் GSTவரியை 18%ஆக உயர்த்தவும், பாப்கார்ன் மீதான வரியை 18% வரை உயர்த்தவும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர்.
அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான ஆலோசனை ஜனவரி மாதம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்கார்ன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சாதாரணமாக பேக் செய்யப்படாத உப்பு மசாலா கலந்த பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி வரியும், பேக் செய்யப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12% ஜிஎஸ்டியும், சாக்லேட் பாப்கார்ன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனை செய்யப்படும் பழைய எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்கனவே விதிக்கப்படும் 12% ஜிஎஸ்டி என்பதை உயர்த்தி 18% ஜிஎஸ்டி வரி என விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன விற்பனை பாதிக்கப்படும் என்று எழுந்த கூற்றுகளுக்கு , அதற்கு பதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வேறு வித வரிச்சலுகை அளிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி தளங்களான ஸ்விகி, சொமேட்டோ ஆகிய தளங்களில் விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு 5%ஆக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிந்துரைகள் தொடர்பான அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் வரும் 2025 ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இறுதி செய்யப்பட்டு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சக குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதி செய்யப்பட்ட பின்னர் புதிய வரி பரிந்துரைகள் அமலுக்கு வரும்.