தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.
முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்றாலும் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தைப்பூசம் ஆகும்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம்.
சென்னை :முருகா.. என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.. ஈசனின் ஞானக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சுடற்பொறியில் இருந்து தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்றாலும் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தைப்பூசம் ஆகும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது .தைப்பூசத்தன்று செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையும் எனவும் நம்பப்படுகிறது.
தைப்பூச திருவிழா தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று .தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வரும் நாளை தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இது இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் ,இலங்கை ,மொரிசியஸ் போன்ற தென்கிழக்கு ஆசியா பகுதிகளிலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாக திகழ்கிறது.
தைப்பூசம் முருகப் பெருமானுக்கு சிறப்பான விழாவாக கருதப்படுவதால் அந்நாளில் சிறப்பு பூஜைகள், காவடி எடுக்கும் நிகழ்வு ,பால்குடம் சுமந்து செல்வது, அழகு குத்துதல் போன்ற வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்வது வழக்கம்.
தைப்பூச திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் பழனியில் அதிவிசேசமாக கொண்டாடப்பட படுகிறது . பாதயாத்திரை சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வது என்பது மிகப் பிரமாண்டமான நிகழ்வாக உள்ளது. இதற்காகவே மார்கழியில் மாலை அணிந்து நடந்தே முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று தைப்பூசத்தை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 11, 2025[ தை மாதம் 29ஆம் தேதி] செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரம் பிப்ரவரி 10 திங்கள் கிழமை மாலை 6:00 மணிக்கு துவங்கி பிப்ரவரி 11 மாலை 6:33 முடிவடைகிறது.