காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!
விடுதலை 2 படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள்.
குறிப்பாக, இளையராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு மிகவும் வலுசேர்ப்பதாக குறிப்பிடுகிறார்கள். முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், இதன் 2-ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது.
வாத்தியார் கம்யூனிசம் பாதையைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன, மக்கள் படையின் கதை? என விரிகிறது விடுதலை 2 கதைக்களம். இந்நிலையில், இந்த படம் குறித்து இயக்குநரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை
மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் “விடுதலை ஒன்றாம் பாகம் ஒரு மறக்க முடியாத படம். அந்த அளவுக்கு படத்தின் கதையும் திரைக்கதையும் அமைந்திருந்தது. அதில், இடம்பெற்ற கதாபாத்திரங்களும் நம் மனதில் மறக்காமல் நிற்கிறது. அந்த அளவிற்கு தரமான கதாபாத்திரங்களை வடிவமைத்திருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
ஆனால், அதே கதாபாத்திரங்கள் இரண்டாம் பாகத்தில் வந்தாலும் கூட மனதில் நிற்கவில்லை. நடிகர் சூரி கூட பத்தோட 11ஆக தான் வருகிறார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாக இல்லை என்று கூறியதோடு, காதுல ரத்தம் வரும் அளவிற்கு கருத்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
முதல் படத்தில் அவர் போராடாமலே, போராளி என்று புரிந்துகொண்டோம். ஆனால், இதில் போராடுகிறார் போராடுகிறார் விஜய் சேதுபதி போராளியாக எப்படி மாறுகிறார் என்பதை விளக்குவதற்காக 50 காட்சிகளை வைத்திருக்கிறார்கள் என்று சலித்து கொண்டார்.
மேலும் தேவையில்லாத காட்சிகளும், தேவையில்லாத கதாபாத்திரங்களும் நிறைய இருக்கிறது. குறிப்பாக மஞ்சுவாரியரின் கதாபாத்திரம் ஏன் என்றே தெரியல, இந்த படத்திற்கு தேவையே இல்லை. விடுதலை முதல் பாகத்தில் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காட்சியுடன் படம் தொடங்கும். ஆனால் இந்த படத்தில் முதல் காட்சியை ஒரு அபத்தமான காட்சியாக இருக்கிறது” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
விடுதலை 2 படத்தை கழுவி ஊத்திய ப்ளூ சட்டை மாறன் 😳#ViduthalaiPart2 pic.twitter.com/8xvlLDhRbG
— M@n (@sincex1993) December 21, 2024