“அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார்”அதிமுக-பாஜக கூட்டணி உறுதி – தயாநிதி மாறன்!
பாஜக - அதிமுக கூட்டணி உறுதி என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லாமலே சொல்லிவிட்டார் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அவருடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக அவர் பேசியிருந்தது ” டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார். அதைப்போல, கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ காமெடி போல் சட்டமன்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்ப பேசினார்.அதிமுக ஒன்றிய அரசை நோக்கி கீச்சுக் குரலில் கூட பேச முடியவில்லை. இந்த நிலையில்தான் இருக்கிறது” என பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்.பி. தயாநிதி மாறன் அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார் என பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இழிவாகப் பேசிய அமித்ஷா பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பயந்துகொண்டே மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஏற்கனவே, ஜெயக்குமார் அவர்கள் பதிலளித்துவிட்டார்கள். எனவே, அவருடைய பதிலை என்னுடைய பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். கேட்ட கேள்விக்கு நேராக சொல்ல பயம் இருக்கிறது இதன் மூலமே தெரிகிறது.
அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார். இதன் மூலமே பாஜக – அதிமுக கூட்டணி உறுதி என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லாமலே சொல்லிவிட்டார். தமிழ்நாட்டுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் அதனை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்ககூடிய ஒரே கட்சி திமுக தான்” எனவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.