“துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள்”..ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!
ஆளுநர் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறார், ஆளுநரின் தலையீடால் பல்கலை.களில் நிர்வாக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து தமிழக அரசு அதற்கான புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை மூலமாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பல்கலைக்கழக துணைவேந்தர் காலியிடங்களை நிரப்பி- நிர்வாகத்தை செம்மைப்படுத்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு ஏற்கனவே தெரிவித்த செய்தியையே திரும்ப தேதியை மாற்றி இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது மிகவும் வேதனையளிக்கிறது.
பல்கலைக்கழக நிதி நல்கை குழு தலைவரின் நியமன உறுப்பினரை “துணைவேந்தர் தேடுதல் குழுவில்” சேர்ப்பது இவருடைய உள்நோக்கமாக உள்ளது மட்டுமே தெரிகிறதே தவிர. வேறு புதிய தகவல்கள் ஏதுமில்லை. மாநில அரசால் ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள சரத்துகளுக்கு உட்பட்டே பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போதே தேடுதல் குழு அமைக்க சார்ந்த பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆணை படியே தற்போது துணைவேந்தருக்கான தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் நெறிமுறைகள் பரிந்துரை மட்டுமே. அதை அப்படியே கட்டாயம் மாநில அரசுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று மாநில அரசுகளை நிர்ப்பந்தப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அரசியல் உள்நோக்கோடு கொடுக்கும்
நெருக்கடி ஆகும். இதனை ஆளுநர் தவிர்த்து பல்கலைக்கழகங்கள் கல்விப்பணியாற்ற வழிவிட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு மாநில ஆளுநர் வேந்தராக இருப்பதை காரணம் காட்டி பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை குட்டுவைத்தும் தனது செய்கையினை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது மட்டுமல்ல- ஆளுநரின் அதிகார வரம்பிற்கு
ஒவ்வொரு ஆண்டும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியினை ஒன்றிய அரசு நிறுத்தியும் குறைத்தும் வருகிறது. இதனால் பல பல்கலைக்கழங்களின் நிதி நிலைமை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழத்தின் வேந்தர் என்ற பொறுப்பில் உள்ள ஆளுநர் தட்டிக் கேட்பதில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாமல் பல்கலைக்கழகங்களை முடக்கும் ஒன்றிய அரசின் செயல்பாட்டை மறைக்கவே- பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் இப்படி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
நிர்வாக குளறுபடிகளுக்கு காரணமான தனது செயல்களை ஆளுநர் இனியாவது நிறுத்தி- தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டும். பல்கலைக்கழக மான்யக்குழுவின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஆளுநர். முடிந்தால் பல்கலைக்கழக மான்யக்குழுவிடம் அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு பெற்றுத் தரலாமே
மொழி உரிமை, கல்வி உரிமை போராட்டங்களை கண்ட தமிழ்நாட்டில் ஆளுநர் தனது சாய அரசியலை கைவிட வேண்டும். இப்பிரச்சினையை தமிழ்நாடு அரசு-முறையாக, சட்டரீதியாக எதிர்கொள்ளும் என தெரிவித்துக் கொள்கிறேன” என கட்டதுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.