நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…
நவம்பர் 25ஆம் தேதி துவங்கிய நாடாளுமடன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. அதானி விவகாரத்தில் ஆரம்பித்து அமித்ஷா சர்ச்சை பேச்சுக்கள் வரை பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின.
கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. ஆனால், அதற்கு சபாநாயகர்கள் அனுமதி தரவில்லை இதனால் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் அமளி , வெளிநடப்பு தொடர்ந்தன.
ஒரே நாடு ஒரே தேர்தல் :
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியாக உருவாக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ மக்களவையில் கொண்டுவரப்பட்டது. தேர்தல் விதியையே மாற்றி, சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை குறைக்கும் (ஒரு முறை மட்டும்) இந்த மசோதாவுக்கு 3இல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக எம்பிக்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என கூறியும் கூட அங்கு 20 பேர் ஆப்சென்ட் ஆகி தலைமையை அப்செட் ஆக்கிவிட்டனர்.
இறுதியில், நாடாளுமன்றமக்களவையில் உள்ள 461 வாக்குகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 307 வாக்குகளை இந்த மசோதா பெற முடியவில்லை . 269 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். 198 பேர் எதிராக வாக்களித்தனர். இதனால், மசோதாவில் சில பரிந்துரைகள் கொண்டுவர நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமித்ஷா பேச்சு :
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அதன் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்த விவாதம் மீது மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” எனக் பேசி சர்ச்சையை கிளப்பினார். இந்த சர்ச்சை பேச்சு நாடு முழுவதும் மத்திய அமைச்சருக்கு எதிரான போராட்டங்களை தூண்டியுள்ளது.
பாஜக மறுப்பு :
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய கருத்துக்கள் திரித்து கூறப்பட்டதாக பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல்கள் எழுப்பினர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் இது தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
பாஜக – காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு :
அமித்ஷா விவாகரம் விஸ்வரூபம் எடுக்க, நாடளுமன்றத்தில் அமித்ஷாவுக்கு எதிரான குரல்கள் வலுத்தது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் பாஜக – காங்கிரஸ் எம்பிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே போல, பாஜக – காங்கிரஸ் எம்பிகளுக்கு இடையேயான தள்ளுமுள்ளுவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மூட்டில் காயம் ஏற்பட்டு பிறகு அவர் நாற்காலியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறு நேற்று முழுக்க நாடாளுமன்ற வளாகம் களோபரமாக இருந்தது .
பாஜக – காங்கிரஸ் புகார் :
பாஜக சார்பில்,ராகுல் காந்திக்கு எதிராக புகார்கள் பதியப்பட்டன . இது தொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற பாதுகாப்பு போலீசில் ராகுல் காந்தி மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அதே போல காங்கிரஸ் தரப்பும் மக்களவை சபாநாயகரிடம் பாஜக எம்பிக்கள் மீது புகார் அளித்தனர் .
இப்படியாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.