பழனிசாமி கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
குற்றஞ்சாட்ட எதுவும் இல்லாமல் பொய் சொல்லக் கூடாது. இபிஎஸ் பதவிக்கு இது அழகல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக அமைச்சர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். ஏற்கனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ” மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக எனவும், 2026 மன்னர் ஆட்சி ஒழிக்கப்படும், தேர்தலில் வெற்றிபெற்றுவிடும் என ஸ்டாலின் கனவு நிறைவேறாது” என பேசியிருந்தார்.
அவர் பேசியதற்கு அமைச்சர் கே.என்.நேரு , அமைச்சர் ரகுபதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ” எடப்பாடி பழனிசாமி திமுகவை பற்றி வயித்தெரிச்சல் காரணமாக பேசிக்கொண்டு இருக்கிறார்” என பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஈரோட்டில் கள ஆய்வுக்காக சென்றுள்ள அவர் நல திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் எடப்பாடி குறித்து பேசியதாவது ” எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல. திமுக ஆட்சி மீது குற்றம் சாட்ட எதுவும் கிடைக்கவில்லை என்பதாலே தொடர்ச்சியாக பழனிசாமி பொய்களை சொல்லிக்கொண்டு வருகிறார்.
முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதாக பொய் சொல்லுகிறார். உண்மை என்னவென்று தெரியாமல் எதாவது சொல்லி குற்றம்சாட்ட பொய்களை சொல்லக்கூடாது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார். அதைப்போல, கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ காமெடி போல் சட்டமன்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்ப பேசினார்.
காலி குடம் உருண்டால் சத்தம் கொஞ்சம் அதிகமாகதான் வரும். அதே நேரத்தில் நீங்கள் உருண்டு, புரண்டு சத்தம்ப் போட்டாலும் அதில் உண்மை ஒரு துளி கூட இருக்காது. பொய் நெல்லை கொட்டி பொங்கல் வைக்க முடியாது. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி சத்தம் போட்டு பேசியதைடிவி.யில் காட்டியிருந்தால், இந்த ஆட்சி கலைந்திருக்குமாம். இது கேட்கவே மிகவும் காமெடியாக இருக்கிறது.
அதிமுக ஒன்றிய அரசை நோக்கி கீச்சுக் குரலில் கூட பேச முடியவில்லை. இந்த நிலையில்தான் இருக்கிறது. வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் போகிற அதிமுக அரசு இல்லை இது. சொன்னதை செய்வோம் என செய்துகாட்டுகிற முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடக்கிற உங்கள் ஸ்டாலினுடைய திராவிட மாடல் அரசு இது. என்னை நம்பி தொடர் வெற்றிகளை வாரி வழங்கும் உங்களுக்கு நான் உண்மையாக உழைப்பேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றைக்கும் மக்களுக்கான நல்லாட்சியை தரும்” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.