பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!
ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு, மனித தவறே காரணம் என ராணுவ நிலைக்குக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம் என மக்களவையில் தாக்கலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
2021 ம் ஆண்டு 8-ம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். பிற்பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னதாக, தமிழகத்தின் குன்னூர் அருகே மலை மீது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தில், எம்ஐ-17 வி5 ரக விமானப் படையின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அவரது மனைவி மதுலிகா, காப்டர் பைலட் குரூப் கேப்டன் வருண் சிங் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், வானிலை மாற்றத்தால் தடுமாறிய விமானி ஹெலிகாப்டரை மேகக் கூட்டத்திற்கு நடுவே செலுத்தியதால் கீழே விழுந்து நொறுங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபக்குள்ளான சம்பவம் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை நிலைக்குழு, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஒரு அதிர்ச்சிக்குரிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், இந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளான எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2021-22ல் ஒன்பது இந்திய விமானப்படை விமான விபத்துகளும், 2018-19ல் 11 விமான விபத்துகளும் உட்பட மொத்தம் 34 விபத்துகள் நடந்துள்ளன. மேலும் இந்த அறிக்கையில், தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரின் விபத்துக்கான ‘காரணம்’ என்னெவென்று குறிப்பிடுகையில், விபத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி உள்ளிட்டவை ஆய்வு செய்ததன் அடிப்படையில் “விபத்துக்கு மனிதத் தவறு தான் காரணம்” என்று பாதுகாப்புத்துறை நிலைக்குழு தெரிவித்துள்ளது.