விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
விடுதலை-2வில் படத்தின் நீளம் கருதி 8 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், அதிர்வு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா நிலையில், நாளை வெளியாகும் 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இப்படமும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் A சான்றிதழ் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் இருந்ததை விட வன்முறை காட்சிகள், நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பட ரீலீஸ் சமயத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று ரிலீஸ் செய்த ஒரு வீடியோ ரசிகர்களை ஷாக் அடைய செய்துள்ளது. அந்த வீடியோவில், ” விடுதலை 2 படத்தின் முழு வேலைகளும் இப்போது தான் முடிந்துள்ளது. படத்தின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. ” என தெரிவித்தார்.
மேலும், ” விடுதலை 2, இது ஒரு பெரிய பயணம். அனைவரும் இதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அனைவருக்கும் நன்றி. இது ஒரு படமாக எப்படி வந்துள்ளது என படம் பார்ப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு அனுபவமாக நாங்கள் இதில் நிறைய கற்றுக்கொண்டோம். ” என கூறியுள்ளார்.
8 நிமிட காட்சிகள் கடைசி நேரத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக வெற்றி மாறன் கூறியுள்ளார். அது படத்தின் அடிநாதத்தை குறைக்காமல் முதல் பாகம் கொடுத்த அனுபவத்தை கொடுத்தால் விடுதலை 2 முதல் பாகத்தை விட மிக பெரிய வெற்றியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.