ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி மரம், பேயாத்தி மரம், அரச மரம் என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் அரை வட்ட வடிவில் ஒன்றை ஒன்று இணைத்து இருக்கும்படி காணப்படும். இதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். சங்க கால இலக்கியங்களில் அத்தி மரம் பற்றி பல இடங்களிலும் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
மேலும், ஆகாயத்தில் இருந்து வரும் நெருப்பை கட்டுப்படுத்தும் தன்மை ஆத்தி மரத்திற்கு உள்ளது. அதாவது இடி, மின்னல் இந்த மரத்தை தாக்காது என சித்தர்கள் கூறியதாக தகவல்கள் உலவுகிறது. அதனால்தான் இதனை இடிதாங்கி மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பட்டையிலிருந்து நாரினை எடுத்து நூல் போல் திரித்து அரைஞான் கயிறு போல் கட்டிக் கொண்டால் மழை நேரத்தில் நம்மை இடி மின்னல் தாக்காது என்றும் சில ஆதாரமற்ற தகவல்கள் உலாவுகின்றன.
ஆத்தி மரத்தின் நன்மைகள் :
ஆத்தி மரத்தின் பட்டையை 100 கிராம் எடுத்து அதனை இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு லிட்டர் தண்ணீரை இளம் சூடாக்கி அதில் இடித்த பட்டையை சேர்த்து சுண்ட காய்ச்சி வடிகட்டி, 100 மில்லி எடுத்து தினமும் மூன்று வேலை குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம், கல்லீரல் வலி குணமாகும்.
ஆத்தி மரத்தின் முற்றிய காய்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 200 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண், நாக்குப்புண் ஆகியவை சரியாகும்.
ஆத்தி மரத்தின் பூ மொட்டுக்களை 50 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி வடிகட்டி தினமும் 50 மில்லி வீதம் மூன்று வேளை குடித்து வர சீதபேதி குணமாகும்.
ஆத்தி மரத்தின் விதைகளை 200 கிராம் எடுத்து இடித்து அதனை சலித்து 200 கிராம் கற்கண்டையும் பொடித்து இரண்டையும் கலந்து தினமும் காலை, மாலை மூன்று கிராம் எடுத்து பசும் பாலில் கலந்து குடித்து வர உடல் பலவீனம் நீங்கி பலம் பெறும்.
ஆத்தி மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பிறகு சலித்து வைத்துக் கொண்டு, அரிசி கழுவிய நீரில் கலந்து, கட்டிகள், வீக்கம் உள்ள இடத்தில் பூசி வர விரைவில் குணமாகும்.
இவ்வாறு பல்வறு ஆயுர்வேத நன்மைகள் ஆத்தி மரத்தின் மூலம் கிடைப்பதாக பல்வேறு ஆயுர்வேத குறிப்புகள் குறிப்பிடுகின்றன.