ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
சிவம் என்றால் அனைத்தையும் தனக்குள் அடைக்கி அசையாது இருப்பதாகும். அதுவே நடராஜர் என்றால் ஆனந்த நடனமாடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர்.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் .
சென்னை :சிவபெருமானுக்கு நடத்தப்படும் மிக உயர்வான ஆறு வகை அபிஷேகங்களில் ஒன்றுதான் இந்த ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும் .இதற்கு தமிழில் திருவாதிரை என்று பொருள் .மார்கழி மாததில் வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் கனகசபை ,மதுரை வெள்ளி சபை ,திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியவை போற்றப்படுகிறது. இங்கு மிக விமர்சையாக ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது .இந்த ஆண்டு ஜனவரி 13- 2025 திங்கள் கிழமை நடைபெற உள்ளது. மேலும் அன்று போகி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
அதிலும் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை திருத்தலத்தில் நடராஜரின் சிலையானது முழுவதும் மரகத கல்லினால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது .இங்கு ஆருத்ரா தரிசனம் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அப்படி நடராஜரை வழிபட உகந்த தினம்தான் இந்த மார்கழி திருவாதிரை ஆகும். சிவபெருமான் பல இடங்களில் லிங்க வடிவில் தான் காட்சி கொடுப்பார் .ஆனால் அவர் நடராஜர் ரூபத்தில் காட்சி கொடுக்கும் ஸ்தலங்கள் மிகக் குறைவுதான். இந்த நடனத்தால்தான் ஒட்டுமொத்த அண்ட சராசரங்களையும் படைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.. பொதுவாக நடராஜர் அனைத்து நாட்களிலும் சந்தன காப்பு சாத்தப்பட்டு காட்சியளிப்பார். ஆனால் இந்த ஆருத்ரா தரிசனத்தின் போது காப்பு கலைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தரிசனம் தருகிறார்.
ஆருத்ரா தரிசனம் உருவான கதை:
சிவபெருமானின் பக்தர்களான பதஞ்சலி முனிவரும், வியாக்கர பாத முனிவரும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண அவரை நோக்கி வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி சிவபெருமானும் தில்லையிலேயே தாண்டவம் ஆடினார் என கூறப்படுகிறது .சிவபெருமான் ஆடிய அந்த நாள்தான் மார்கழி திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஆகும் . அதனால்தான் மார்கழி ஆருத்ரா தரிசனம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த தரிசனத்தை காணும் போது வாழ்வில் சுபிட்சம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்திற்கு பலவித பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது .
- பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்வதால் நோய் நொடி விலகி செல்வம் பெருகும் .
- பால் அபிஷேகம் செய்வதால் வாழ்வில் அமைதி கிடைக்கும்.
- தயிர் அபிஷேகம் செய்தால் நினைத்த செயல் வெற்றி அடையும்.
- தேன் அபிஷேகம் செய்தால் சிறந்த பேச்சாற்றல் பெருகும், ஞானம் கிடைக்கும்.
- நெய் அபிஷேகம் செய்தால் செல்வம் கூடும்.
- சந்தனம் அபிஷேகம் செய்தால் தொழில் வெற்றி கிடைக்கும். புகழ் கிடைக்கும்.
- பன்னீர் அபிஷேகம் செய்தால் மற்றவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.
- விபூதி அபிஷேகம் செய்தால் சர்வமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சிவம் என்றால் அனைத்தையும் தனக்குள் அடைக்கி அசையாது இருப்பதாகும். அதுவே நடராஜர் என்றால் ஆனந்த நடனமாடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர். ஆகவே பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கே உரிய மார்கழி திருவாதிரை தரிசனத்தை கண்டு அதன் அளவில்லா ஆனந்த பலனை பெறுவோம்.