அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
காங்கிரஸ் கட்சி உண்மையை மறைத்து, திரித்து தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது என இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பேசும்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என்று பேசியிருந்தார்.
இதனையடுத்து, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்”அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சை வேண்டுமென்றே திரித்து பேசுகிற காங்கிரஸ் கட்சி பேசுவதாக” கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
READ MORE- “நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பாபசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தியதும் அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதும் காங்கிரஸ் கட்சி தான். அண்ணல் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை திரு.அமித்ஷா ஜி அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு அவரது மரணத்துக்குப் பின்னர் கூட பாரத ரத்னா தர மறுத்து வேடிக்கை காட்டிய கட்சிதான் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களுக்கு தானே பல முறை பாரத ரத்னா விருதைக் கொடுத்துக் கொண்டார்கள். 1955-ம் ஆண்டு நேரு தமக்கு தாமே பாரத ரத்னா விருது பெற்றுக் கொன்டார். 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி தமக்கு தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார். ஆனால் 1990-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத காலத்தில், பாஜக ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்த போதுதான் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் மீதான நேருவின் வெறுப்பை நாடு நன்கு அறியும்.
அதே சமயம் பாரதப் பிரதமர் மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணல் அம்பேத்கரை பெருமை சேர்த்து வருவதை நாடறியும். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழை உலகம் முழுவதும் பாஜக பரப்பி வருகிறது. அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்டங்களை உரிய முறையில் அமல்படுத்தி அனைவருக்கும் உரிய நீதி என்ற உன்னத கோட்பாட்டை செயல்படுத்தி வருவதும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான்.
தேர்தல் சமயத்தில் திரு.அமித்ஷா அவர்களின் பேச்சை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து திரித்து காங்கிரஸ் வெளியிட்டது. அதேபோல தற்போதும் காங்கிரஸ் திரித்து கூறும் வேலையை மீண்டும் செய்கிறது காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மையை மறைத்து திரித்து தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்ந்து விடுகிறது. காங்கிரஸ் கட்சிதான் அண்ணல் அம்பேத்கர் வகுத்த இடஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி.
மக்கள் தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திரித்துகூறும் அரசியலை பாரத நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இந்த அவதூறு பிரசாரம் தொடர்ந்தால் காங்கிரஸை மக்கள் தேர்தல் களத்தில் இருந்தே அகற்றி விடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என மிகவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah ஜி அவர்கள் பேசிய பேச்சை வேண்டுமென்றே திரித்து பேசுகிற காங்கிரஸ் கட்சிக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாம் பேசியது என்ன என்பது குறித்து திரு. அமித்ஷா ஜி அவர்கள் தெளிவான விளக்கத்தை… pic.twitter.com/XrY0oQHGsw
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 18, 2024