10 மணி வரை இந்த 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரம் அதாவது 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18-12-2024) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.