“முதலமைச்சர் மற்றும் உதய் அண்ணாவுக்கு நன்றி” செஸ் சாம்பியன் குகேஷ் பேச்சு!
சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய செஸ் சாம்பியன் குகேஷ் , தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சர் உதய் அண்ணாவுக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன செஸ் வீரர் டிங் லின்னை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றார் . தமிழகத்தை சேர்ந்த குகேஷுக்கு ஏற்கனவே தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்து பாராட்டி இருந்த நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதற்காக இன்று சென்னை கலைவாணர் அரங்கிற்கு திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். வழிநெடுக பொதுமக்கள் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க கலைவாணர் அரங்கிற்கு குகேஷ் வந்தார்.
இந்த பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , குகேஷின் பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய உலக செஸ் சாம்பியன் குகேஷ் , உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதய் அண்ணா, பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். செஸ் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு போட்டிகளை நடத்தியது. குறிப்பாக செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது.” என குறிப்பிட்டு பேசினார். அடுத்ததாக, தமிழ்நாடு முதலமைச்சர் குகேஷை பாராட்டி பேசினார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.