“சண்டை செய்யணும்”…அசத்தல் அரைசதம்! சச்சின் கோலியை மிஞ்சிய ஜடேஜா!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசிய பிறகு ரவீந்திர ஜடேஜா மட்டையை வாள் போல் சுழற்றி பழக்கமான பாணியில் கொண்டாடினார்.
பிரிஸ்பேன்: இந்தியா -ஆஸ்ரேலியா மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், விராட் கோலி, ரோஹித், பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இந்த மூன்றாவது டெஸ்டில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை.
அப்படி இருந்தபோதிலும், இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி இருந்தபோது கே.எல்.ராகுல் முக்கியமான தன்னுடைய இன்னிங்ஸில் 84 ரன்கள் எடுத்தார். சதத்தை தவறவிட்டாலும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார். அதைப்போல ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் தளபதி ஜடேஜாவும் அசத்தலாக விளையாடி அரை சதம் விளாசினார்.
இந்த போட்டியில் நிதானமாக 123 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் குவித்தார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் சராசரி 56.75 ஆக நிலையாகியுள்ளது. இதன் மூலம் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகிய ஜாம்பவான்களையும் ஜடேஜா மிஞ்சியிருக்கிறார்.
ஏனென்றால், ஆஸ்ரேலியாவில் சச்சின் டெண்டுல்கர் (53.20), விராட் கோலி (50.96) ஆகியவை தான் சராசரியாக வைத்துள்ளனர். அவர்களை தற்போது ஜடேஜா மிஞ்சியிருக்கிறார். அதைப்போல, ஆஸ்ரேலியாவில் நடந்த டெஸ்டில் ஜடேஜா 5 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியிருக்கும் அவர் மொத்தமாக 227 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் மூன்று அரை சதங்கள் அடித்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.