தூத்துக்குடி மாவட்ட கனமழை மீட்பு பணிகள்.., மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட்

தூத்துக்குடி மாநகராட்சில் 225 வீடுகள் கனமழையால் சேதமடைந்தது என்றும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Thoothukudi Rains - MLA Geetha jeevan inspect the Rainwater relief works

தூத்துக்குடி : கடந்த வாரம் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தேங்கிய மழைநீரை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியேற்றி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி இரவு நிலவரப்படி மாவட்டத்தில் 474 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்றையதினம் 292 இடங்களாக இருந்தது. இன்றையதினம் 100 இடங்களுக்கும் கீழ் குறைவாகவே உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் தேங்கியுள்ள மழைநீரை 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் கொண்டு பங்கிள் ஓடை வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 14ஆம் தேதி, 8 இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து சாலைகளும் சரியாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றிக்கு செல்லக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மருதூர் அணைக்கட்டுக்கு இன்று வரக்கூடிய தண்ணீரின் அளவு 5648 கனஅடியாகவும், அதுபோன்று, திருவைகுண்டம் அணைக்கட்டுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு 10370 கனஅடியாகவும் உள்ளது.

கோரம்பள்ளம் குளத்தில் கடந்த 2 நாட்களாக அதிகமாக தண்ணீர் வரத்து வந்துகொண்டிருந்தது. கோரம்பள்ளம் குளத்தின் நீரின் அளவினை சீரான நிலையில் பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் 1.85 மீட்டர் முதல் 1.9 மீட்டர் வரை தண்ணீரை நிறுத்தி பராமரிக்கப்பட்டது. இப்போது மழை நின்ற காரணத்தினால் விவசாய பயன்பாட்டிற்காக கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க வேண்டுமென்பதால் 1.12 மீட்டர் வரைக்கு தண்ணீர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளத்தை பொறத்தவரை அதிகபட்சமாக 19200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 212 குடிசை வீடுகள் சிறிதளவும், 05 குடிசை வீடுகள் முழுமையாகவும், பட்டா வீடுகள் என மொத்தம் 225 வீடுகள் சேதமடைந்துள்ளது. கால்நடைகளை பொறுத்தவரையில் 1 பசு மாடு, 41 ஆடுகள், கோழிப்பண்ணையில் 10 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளது. குளங்கள் மற்றும் ஏரிகளில் உடைப்பு எதுவும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் சூழ்ந்தது. நேற்று மாலை முதலே விவசாய நிலங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடியத்தொடங்கியது. இன்று முழுமையாக வடிந்துள்ளது.

குளங்களில் தண்ணீர் இருப்பை பொறுத்தவரை 200க்கும் மேற்பட்ட குளங்களில் 95%க்கும் அதிகமாகவும், 80 குளங்களுக்கு மேல் 100 சதவிகிதம் நிறைந்துள்ளது. மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டுகளிலிருந்து தண்ணீர் பெறக்கூடிய அனைத்து குளங்களிலும் 95%க்கும்மேல் தண்ணீர் உள்ளது. அதுமட்டும்மல்லாமல், கால்வாய் பாசனம் இல்லாத 180 குளங்களில் 50 முதல் 60 சதவிகிதம் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

. ஆத்தூர் பாலத்தில் நேற்று முதலே போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் மறுசீரமைப்புப பணிகள் விரைவில் தொடங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விவசாயியும் விடுபட்டுவிடக்கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்