மழையால் பாதிக்கப்பட் 3ஆம் நாள் ஆட்டம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திணறும் இந்திய அணி!
பிரிஸ்பேன் மைதானத்தில் மழைக் காரணமாக ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.
இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸ்ரேலியா அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். இந்த நிலையில், மூன்றாவது போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி, இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டத்தின் இடையிடையே மழை விட்டு விட்டு பெய்ததால் தற்போது மூன்றாம் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இதில், ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், கில் 1 ரன்னிலும், விராட் கோலி 3 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது .இந்திய அணி திணறி வருகிறது. பின்னர், களமிறங்கிய கேஎல் ராகுல் (33*), ரோஹித் சர்மா (0*) ரன்களிலும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 394 ரன்களுடன் பின் தங்கியிருக்கிறது.