வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்.!
வங்கக் கடலில் நேற்றே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், இதுவரை உருவாகவில்லை.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இன்று இது வலுப்பெற்று, தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில் தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நாளை மறுநாள் கடலூர், விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.