ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, பக்கதர்கள் பலரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். அப்படி தான் இசையமைப்பாளர் இளையராஜா இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார்.
அப்போது, கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி ஜீயர்கள் கூறினார்கள். இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் அழைத்து சென்றார்கள்.
அப்போது, அங்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சிலர் முகம் சுழித்து கொண்டு அவர் எப்படி உள்ளே செல்லலாம்? அவர் செல்ல கூடாது என கூறினார்கள். இதனால் இளையராஜாவை வெளியே செல்லும்படி ஜீயர்கள் கூறியுள்ளனர்.
கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில், அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இளையராஜா தடுத்து நிறுத்தம் செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இளையராஜாவுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.