எந்தக் காரணத்துக்காகவும் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம் – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கும்பகோணம் : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய் இந்த விழாவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை வருகை தராததற்கு கூட்டணி கட்சி (திமுக) அழுத்தம் கொடுப்பதாக விமர்சித்து பேசியிருந்தார்.
அதைப்போல, ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்ததால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், திமுக விசிக கூட்டணி தொடருமா? என்கிற அளவுக்கு கேள்விகளையும் எழுப்ப காரணமாக அமைந்தது.
பல இடங்களில் விசிக தலைவர் திருமாவளவன் எங்களுடைய கூட்டணி தொடரும் என தெளிவுபடுத்தி வருகிறார். அப்படி தான் மீண்டும் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டபோது எந்தக் காரணத்துக்காகவும் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம் என உறுதியாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் கூட்டணியை விட்டு கண்டிப்பாக விலகமாட்டோம்.திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், அது எப்போதும் நடக்காது.
ஏதோ அழுத்தம், மிரட்டல், அச்சுறுத்தல் என்று சொல்கிறார்கள். ஆனால், என்னுடைய இயல்பு என்னவென்பது என்னோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நிச்சயமாக தெரியும். திருமாவளவன் திமுகவிடம் ஒரு மாதிரி பேசிவிட்டு.. மற்றோரு பக்கம் மறைமுகமாக ஒன்று செய்கிறார் என சிலர் பேசுகிறார்கள்.இப்போது நான் சொல்கிறேன்..அந்த மாதிரி அரசியல் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு அப்படி செய்யவேண்டிய அவசியமும் இல்லை.
விசிக எப்போதும் சனாதனத்திற்கு எதிராகதான் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் சனாதன சக்திகள் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது. அதைப்போல, எந்த காரணத்துக்காகவும் திமுக கூட்டணி பிரியாது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம்” எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.