அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது!
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, முகலிவாக்கம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.
குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, விசிக தலைவர் திருமாவளவன் , வனத்துறை அமைச்சர் பொன்முடி, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.
அதை தொடர்ந்து, முகலிவாக்கம் எல் அண்டு டி காலனியில் உள்ள மின்மயானத்தில் மாலை தகனம் செய்யப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி, அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழக அரசும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறுதி சடங்கு நடைபெற்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, முகலிவாக்கம் மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.