பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக! இபிஎஸ் கடும் விமர்சனம்!
500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ” கூட்டணி என்பது வரும் போகும், ஆனால் கொள்கை என்பது எப்போதும் நிலைத்து நிற்கும். கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைத்த ஒரே கட்சி எது என்றால் அது அதிமுக தான். உண்மையான உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சியும் அதிமுக தான். அதைப்போல, வறட்சி, பேரிடர் காலத்தில் விவசாயிகளையும், மக்களையும் பாதுகாத்து அதிமுக தான்” என பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்தும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” 2021 தேர்தலில் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சி பறிபோனது. பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக தேர்தலில் வெற்றிபெறவில்லை. பல்வேறு பொய்களை வாரிவிட்டார்கள். இந்தியாவில் 525 அறிவிப்பு எந்த அரசியல் கட்சிகளும் அறிவித்தது இல்லை.
மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். நடைபெறவுள்ள 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. மு.க ஸ்டாலின் கனவு நிறைவேறாது 200 தொகுதிகளில் வெற்றி என்பது அதிமுக கூட்டணிக்கும் பொருந்தும்.
மக்களவை தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகள் பெற்றோம். பெரிய கூட்டணி அமைத்த திமுக 6.5% வாக்குகளையே பெற்றது. அதைப்போல, 2014ம-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 18.28% வாக்குகளை பெற்று அரை சதம் குறைவாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. அதைப்போல கடந்த 2014-ஆம் ஆண்டு 8 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%, ஆனால் தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜக கூட்டணியை விட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது.
அதிகமுக என்றாலே மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும் கட்சி. யானைக்கு பலம் தும்பிக்கை நமக்கு பலம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருந்தால் நாம் எதில் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம். “எனவும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.