குறுக்கிட்ட கனமழை.. இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இன்று ஒருநாள் நிறுத்தம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் கனமழை குறுக்கிட்டதன் காரணமாக தடைபட்டது.
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கு ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியானது பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான உஸ்மான் கவஜா மற்றும் நாதன் ஸ்ரீனி களத்தில் பேட்டிங் செய்து வருகின்றனர்.
சரியாக 13.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 28/0 எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைப்பட்டது. ஒருவேளை இந்த போட்டியானது மழையின் காரணமாக நடத்த முடியாமல் போனால், இந்திய அணியின் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த போட்டியிலும், இனி வரும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகின்றது.
தற்போது வெளியான தகவலின்படி, கனமழை காரணமாக இன்றைய நாள் ஆட்டமானது கைவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நாள் அதாவது, இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது. 2ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 5.20 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.