ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது… இரவு சிறை.. இன்று விடுதலை!
புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண சந்தியா திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், தனது மீதான எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி அல்லு அர்ஜுன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வருவதற்கு முன்னதாகவே, தெலங்கானாவில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டிற்கு விரைந்த ஐதராபாத் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று கைது செய்தனர். பின்னர், ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அல்லு அர்ஜுனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மதியம் 3:30 மணிக்கு நம்பப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு, அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவருக்கு நேற்று ஜாமின் கிடைத்த நிலையிலும், ஆவணங்கள் சிறைக்கு வர தாமதமானதால் இரவு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன், இன்று காலையில் பின் வாசல் வழியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.