விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் ஏற்றப்பட்ட மகா தீபம்! ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலையார்
திருவண்ணாமலை தீப மலையில் 2668 அடி உயர உச்சியில் இன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை : தமிழகத்தின் தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கடந்த டிசம்பர் நான்காம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கொடி ஏற்றப்பட்டு தீபத் திருவிழா துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, தினமும் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று (டிசம்பர் 12) மகாதீபம் ஏற்ற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 2668 அடி உயரம் கொண்ட தீப மலை மீது மகா கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது.
பிறகு இன்று (டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவின் உற்சவ நிகழ்வான மகாதீபம் தற்போது மாலை 6 மணி அளவில் ஏற்றப்பட்டது. கனமழை, சில தினங்கள் முன்பு நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு மலை ஏற தடை விதித்தது. அதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தது.
மேலும், மகா தீப கொப்பரையில் 4500 கிலோ நெய்யும் , 1500 – 2000 மீட்டர் காடா திரியும் இட்டு அதன் மீது கற்பூர கட்டிகளை குவித்து மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. “மோட்ச தீபம்” என அழைக்கப்படும் இந்த மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் தரிக்க காட்சி தரும். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவல பாதையில் குவிந்திருந்தனர். மலை ஏற அனுமதி வழங்கப்படாவிட்டாலும், கோவிலில் இருந்து மகா தீபத்தை தரிசித்து ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலையாரை பக்தி பரவசத்துடன் அரோகரா முழக்கமிட்டு வணங்கினர்.