புஷ்பா 2 ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை! நீதிமன்றம் உத்தரவு!
புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் திரையரங்கில் ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கானா போலீசால் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது நீதிமன்றம்.
ஹைதிராபாத் : கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது, அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதிராபாத் சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது.
அப்போது, அதிகாலை சிறப்பு காட்சிக்கு தனது குழந்தைகளுடன் வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார் . ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர் உள்ளிட்டோர் கைதான நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த சிக்கட்பள்ளி போலீசார் அவரை, நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
பிரபல நடிகர், திரையரங்கில் நடந்த அசம்பாவித சமபத்திற்காக கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.