அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என தென்மண்டல வானிலை ஆய்வுமண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வானிலை நிலவரம் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் பெய்யும் கனமழை அளவு குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பல்வேறு தகவல்களை அளித்தார். அதில், தற்போதைய மழை அளவு மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் கூறினார்.
அதில், தமிழக நாளை தெற்கு அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 17, 18 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் இன்று (டிசம்பர் 13) குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்றானது மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குமரிக்கடல் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறர்கள். மேலும், 15, 16, 17 தேதிகளில் அந்தமான் அந்தமான் கடற்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறைக்காற்றானது மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை , காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்றுவரையிலான கால அளவு பொறுத்தவரையில் பதிவான மழையின் அளவு 54 செமீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 40 செமீ. இது வழக்கத்தை விட 32% அதிகம். மாவட்டங்களை பொறுத்தவரையில் 5 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் 22 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 13 மாவட்டங்களில் இயல்பு நிலையை ஒட்டியும் மழை அளவு பதிவாகியுள்ளது. நேற்று வரை 16% மழையளவு அதிகமாக இருந்தது. இன்று ஒரே நாளில் 32% அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரே நாளில் 16% ஒரே நாளில் அதிகமாகி உள்ளது ” என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.