திருவண்ணாமலை தீபக் கொப்பரைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா?.
பஞ்சபூதங்களின் நெருப்பிற்குரிய ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை தான் .இங்கு மலையே இறைவனின் ஸ்ருபமாக காட்சியளிக்கிறது .
கார்த்திகை தீபத்தின் சிறப்பே திருவண்ணாமலை மலை மீது கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் தான் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
திருவண்ணாமலை ;மனித பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தான் வாழ்நாளில் ஒருமுறையாவது கார்த்திகை மகா தீபத்தை பார்த்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் மற்றொரு பிறவி இருக்காது என்றும் நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் சிறப்பு என்னவென்றால் மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்களிலும் ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கும். ஏகன் என்றால் ஒருவன், அனேகன் என்றால் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருப்பவன் மேலும் இறைவன் பல்வேறு வடிவங்களில் நிறைந்து இருக்கிறார் என்பதை உணர்த்துவதாகும்.
தீப கொப்பரையின் சிறப்புகள் ;
இந்த மகா தீபம் ஏற்றுவதற்கு செம்பினால் ஆன கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இது செம்பு தகடு மற்றும் பஞ்சலோகத்தால் ஆனது. ஆகம விதிகளின்படி இந்த கொப்பரை ஐந்தரை அடி உயரமும், நான்கடி மேல் பாகமும், இரண்டு அடி கீழ்பாகமும் கொண்டிருக்கும் .ஒவ்வொரு தீபத் திருவிழாவின் போதும் இந்த கொப்பரையை தான் பயன்படுத்துகின்றனர். இதற்கு காடா துணி திரியாக பயன்படுத்தப்படுகிறது .2000 மீட்டர் காடா துணி வரை கொப்பரைக்கு பயன்படுத்த தயாரிக்கப்படுகிறது.
மலை மீது ஏற்றப்படும் இந்த தீப ஒளி 11 நாட்கள் வரை எரிகின்றது . மேலும் 20 கிலோமீட்டர் தொலைவு வரையிலும் காட்சியளிக்கிறது .தீபம் எரிந்து முடிந்த பிறகு அந்தக் கொப்பரை அருணாச்சலேஸ்வரர் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது .பிறகு கொப்பரையை சுத்தம் செய்யும் போது அதிலுள்ள மையானது சேகரிக்க படுகிறது . அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் சிவகாமி மற்றும் சமேத நடராஜருக்கு அந்த மை சாத்தப்பட்டு பின்பு கோவில் நிர்வாகம் சார்பில் தீபமையானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது .குறிப்பாக மகாதீபம் ஏற்றுவதற்காக நெய் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
மகா தீப தரிசனத்தின் பலன்கள் ;
இந்த தீபம் 11 நாட்கள் வரை எரிகின்றது.. அதில் ஒரு நாள் தீப தரிசனத்தை பார்த்தாலும் அதன் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தரிசனத்தை பார்த்தால் செல்வ செழிப்பான வாழ்வும் ,வம்சம் தளைக்கும் என்றும் நம்பப்படுகிறது . எவர் ஒருவர் இந்த மகா தீப ஒளியை நேரில் தரிசிக்கின்றாரோ அவரின் 21 தலைமுறைக்கும் முத்தி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது .
அதேபோல் அந்த தீப ஒளி ஏற்றப்பட்ட பின் கிரிவலம் வந்தால் அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்ம சக்தி பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிவபெருமான் அந்த அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகமும் உள்ளது. பஞ்சபூதங்களின் நெருப்பிற்குரிய ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை தான் .இங்கு மலையே இறைவனின் ஸ்ருபமாக காட்சியளிக்கிறது .