உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… இன்று எங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்?
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்கிற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் டிசம்பர் 16ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின், அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை குறைந்திருக்கும் என்றும் 16-ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பின்னர், அடுத்த வாரம் திங்கட்கிழமை (டிச, 16) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 17ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (டிச, 13) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை
இன்று (டிச, 13) கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை
மேலும், இன்று (டிச, 13) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக, மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.