பெண் உயிரிழந்த விவகாரம் : ‘புஷ்பா 2’ ஹீரோ அல்லு அர்ஜுன் அதிரடி கைது!
புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தெலுங்கானா சிக்கட்பள்ளி காவல் நிலைய போலீசாரால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. அந்நாளில், ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் இந்த படத்தின் சிறப்பு காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர்.
அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி எனும் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா, சிக்கட்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சந்தியா திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுனை தற்போது சிக்கட்பள்ளி காவல்துறையினர் கைது செய்து தற்போது சிக்கட்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தால் கூட்டம் கூடும் என தெரிந்தும் முன்கூட்டியே திரையரங்கு நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அல்லு அர்ஜுனுக்கு என தனி பாதை அமைக்கப்படவில்லை என்றும் காவல்த்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் தரப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி கொடுப்பதாக கூறியுள்ளனர் என்பதும், புஷ்பா படக்குழுவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்வதாக அறிவித்து இருததும் குறிப்பிடத்தக்கது.