தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: வங்கக்கடலில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியதால் நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது.
மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, “திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60000 கன அடி நீர் இன்று (13.12.2024) வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.