திருவண்ணாமலை: இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம்! குவியும் பக்தர்கள்…
திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை: கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்போது தமிழகம் முழுவதும் இந்துக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் தீபத்திருவிழாவில் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்கு, தீபக்கொப்பரை மற்றும் இதற்காக 3,500 கிலோ நெய், 1,500 அடி நீள காடாத் துணியால் ஆன திரி உள்ளிட்ட தீபம் ஏற்ற தேவையான அணைத்து பொருட்களும் நேற்றைய தினம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அண்ணாமலையார் மலை மீதுகொண்டு செல்லப்பட்டது.
நிலச்சரிவு அபாயம் காரணமாக இந்தாண்டு பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படவில்லை. அந்த வகையில், வல்லுநர் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் படி, திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற 300 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 3.30 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைக் கண்டு பக்தர்கள் அண்ணாமலையாருக்கு “அரோகரா”…… என முழக்கம் செய்து வழிபட்டனர். பரணி தீபம் ஏற்றும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த மகாதீபம் 20.கி.மீ., தூரம் வரை தெரியும், பஞ்ச லோகத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயர கொப்பரையில் எரிகின்ற மகாதீத்தை பார்ப்பதற்கு பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று காலை முதலே திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அந்த வகையில், பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மலையை சுற்றிலும் 29 இடங்களில் மலையேற வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.