தூத்துக்குடி : பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படும்! ஆட்சியர் அறிவிப்பு!
கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படும் என ஆட்சித்தலைவர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி : மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2024-25ம் நிதியாண்டில் “கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்” திட்டத்தின் கீழ் செயல்படுத்த மொத்தம் 105 எண்களுக்கு ரூ.7,000/- வீதம் ரூ.7.35 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்புசெட்டுகளை இயக்கச் செல்லும் போது பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளை தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடவும். நிறுத்திடவும் உதவுகிறது.
மேலும், ஆதிதிராவிடர் வகுப்பினர் / பழங்குடியினர் வகுப்பினர் / சிறு விவசாயிகள் / குறு விவசாயி மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7000/- மானியமும், இதர விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5000/- மானியமும் வழங்கப்படும். தலைமைப் பொறியாளர் (வே.பொ.), சென்னை அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மாடல்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் புகைப்படம். நிலப்பட்டா, அடங்கல், ஆதார் நகல், சிறு குறு விவசாயி சான்று மற்றும் சாதிச் சான்று ஆகிய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (9443688032), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (9443276371) மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் திருச்செந்தூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (8778426945) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.