ரொம்ப பெருமையா இருக்கு! உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நெகிழ்ச்சி பேச்சு!
பயிற்சிக்கான பலன் தான் இந்த வெற்றி என உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
சிங்கப்பூர் : நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்றது மட்டுமின்றி, 18 வயதான குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்து செஸ் விளையாடிட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் மாறியுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். போட்டியில் வெற்றிபெற்ற பிறகு அந்த ஆனந்தத்தில் இந்த தருணத்திற்காக தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன் என்கிற வகையில் எமோஷனலாக குகேஷ் கண்கலங்கினார்.
சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பேசிய அவர் ” போட்டியில் வெற்றிபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் நான் எனக்கு எதிராக விளையாடிய டிங் லின்ன்ணுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நான் என்னுடைய 7 வயதில் இருந்து செஸ் விளையாடி கொண்டு இருக்கிறேன். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லவேண்டும் என்பது என்னுடைய பெரிய கனவு.
இதற்காக நான் இரண்டு வருடங்களாக தீவிரமாக பயிற்சியும் எடுத்து வந்தேன். அந்த பயிற்சிக்கான பலன் தான் இது என்று நான் நினைக்கிறேன். வெற்றிபெற்ற மகிழ்ச்சியை எப்படி சொல்ல முடியும் எனக்கு தெரியவில்லை. எனக்குள் அவ்வளவு சந்தோசம் இருக்கிறது. இந்த நேரத்தில் நான் கடவுளுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” எனவும் கூறினார்.