வைக்கம் 100 : ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் – பினராயி விஜயன்! அடுத்தடுத்த நிகழ்வுகள்…
வைக்கம் நூற்றாண்டு விழாவில் ஒரே மேடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலவர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவின் முதல் பகுதியாக, தமிழக அரசு நிதி உதவியால் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர்.
அதன்பிறகு, வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெறும் மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில மூத்த அமைச்சர்கள், கீ.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இரு மாநில முதலமைச்சருக்கும் தங்கள் மாநில அரசு சார்பாக நினைவு பரிசுகளை மேடையில் பரிமாறிக்கொண்டனர்.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சிறப்புறை ஆற்ற உள்ளனர். பின்னர், தமிழக அரசால் 2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது பெற்ற கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான பரிசுத்தொகை ஆகியவை வழங்கப்பட உள்ளது.
வைக்கதில் பெரியார் நினைவகத்தை புதுப்பிக்க ரூ.8.14 கோடி நிதியுதவியை தமிழக அரசு வழங்கியது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.