வெளுத்து வாங்கும் கனமழை… இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? முழு விவரம்…
கனமழை காரணமாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தற்பொழுது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சி, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும்.
மேலும், நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இன்று (டிச.12) பள்ளி, கல்லூரி இரண்டிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றைய தினமே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வேலூர் மாவட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.