இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை!
பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் நடைபெறும் இந்தியா மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 11) காலை தொடங்கி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதும், 3வது போட்டி பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலைபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற முழுதான வெற்றி தவிர்க்கப்படும். இந்திய அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் கிடைத்த இந்த ஒரு வெற்றி சற்று உத்வேகமாக அமையும். அதே போல, ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றால், இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் தொடரை முழுதாக வென்று தங்கள் பலத்தை மேலும் வலுப்படுத்தி கொள்ளும்.
இன்றைய போட்டியின் வெற்றி தோல்விகள் ஒருநாள் மகளிர் கிரிக்கெட் அணி தரவரிசையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திலும், இந்திய அணி 4வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொடங்கியுள்ள 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். தஹ்லியா மெக்ராத் தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது பேட்டிங் செய்ய தொடங்கியுள்ளது.