இந்த மாவட்டங்களில் டிச 11,12 மிக கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த பாலச்சந்திரன்!
நாளை கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அதற்கான தகவலை கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக அடுத்த 4 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது மழைபெய்யும். நாளை கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதே சமயம் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் 12-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான காலகட்டம் வரை பதிவான மழையின் அளவு 45 செ.மீ இயல்பு அளவு 40. இது இயல்பை விட 14.செ.மீ அதிகம் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மீனவர்களுக்கான எச்சரிக்கை பற்றிய தகவலையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது ” இன்று தமிழக கடலோரப்பகுதிகள் பொறுத்தவரையில் எச்சரிக்கை ஏதுமில்லை. ஆனால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11,12, 13 ஆகிய தேதிகள் வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.